விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்துவந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்துடன் இருந்த திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமான கள்ளக்குறிச்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
திருவெண்ணெய்நல்லூரிலிருந்து விழுப்புரம் செல்வதற்கு 20 கி.மீ தூரம் ஆனால் கள்ளக்குறிச்சிக்கு 70 கி.மீ தூரம் ஆகும். ஆனால், அருகில் இருக்கும் பேரூராட்சியை விழுப்புரம் மாவட்டத்துடன் சேர்க்காமல் கள்ளக்குறிச்சியோடு சேர்த்தது தங்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியை பழையபடி அருகிலுள்ள விழுப்புரத்துடனேயே சேர்க்க வேண்டும் என்று அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பகுதி மக்கள், கடந்த ஒன்பது மாதங்களாக திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர், முகையூர் ஆகிய பகுதிகளை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கியும், முதலமைச்சர் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு 5 ஆயிரம் தபால் அட்டைகள் அனுப்பியும் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம், கண்டன ஆர்ப்பாட்டம், கருப்புக்கொடி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களையும் அவர்கள் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், திருவெண்ணெய்நல்லூரை தாலுகாவாக அறிவிக்ககோரியும், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வேண்டியும் விழுப்புரம் மாவட்ட இணைப்புக் குழு மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் திருவெண்ணெய்நல்லூரில் இன்று முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கலந்துகொண்டார். கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "நான் இந்த பிரச்னையை அரசியலாக்கவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு அரசு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் தெரிவித்திருக்கிறேன். திருவெண்ணெய்நல்லூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளளேன்" என்றார்.
மேலும், இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்துடன் இந்த பகுதிகளை இணைக்க தமிழ்நாடு முதலமைச்சரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: விழுப்புரம் மாவட்டத்திலேயேதான் இருப்போம் - பொதுமக்கள் போர்க்கொடி!