Viluppuram Festival: விழுப்புரம்: தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை விழா தொடர்ந்து ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். போகிப்பண்டிகையில் தொடங்கி சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்ற வரிசையில் 5ஆவது நாளில் ஆற்றுத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். 5ஆவது நாள் ஆற்றுத்திருவிழாவில் தெய்வங்களுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி எனும் பெருவிழா நடத்தப்படும்.
இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆறுகளில் ஒன்று கூடுவர். இந்நிகழ்வில் சிறுவர்கள் விளையாடுவதற்கு ராட்டினம், ஊஞ்சல் மற்றும் விளையாட்டுப்பொருட்களின் விற்பனை, விவசாயிகள் விளைவிக்கும் மரவள்ளிக்கிழங்கு, பன்னீர் கரும்புகள் விற்பனையும் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றுத்திருவிழா கடந்த கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை, பின்னர் கரோனா கட்டுப்பாடு நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இன்று(ஜன.19) ஆற்றுத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டாச்சிபுரம் தாலுகா, அரகண்டநல்லூர், மணம்பூண்டி, ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும் மற்றும் ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் இத்திருவிழா இன்று நடைபெற்றது. ஆற்றுத்திருவிழாவையொட்டி விழுப்புரம் எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதேபோன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் எல்லைகளை இணைக்கும் திருக்கோயிலூர் இடத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை அடுத்த தை 5ஆம் நாள் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்றைய நாளில் ஆற்றுத்திருவிழாவில் வீரபாண்டி, வேட்டவலம், கீழையூர் சிவன், இரட்டை விநாயகர் ஆலயங்களில் இருந்துவரும் சுவாமிகள் ஆற்றில் இறங்கி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பெருவிழா நிகழ்ச்சியில் திருக்கோயிலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்பெண்ணையாற்றில் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி விழாவைச் சிறப்பித்தனர். இவ்விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் டிஎஸ்பி பழனி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை தோற்கடித்து புரட்சி படைப்போம் - தமிழ் மாநில காங்கிரஸ்