விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சென்னாலூர் எல்லைக்குள்பட்ட தின்னலூர் ஏரி கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக முழுக் கொள்ளளவை எட்டி இருந்த நிலையில் நேற்று (டிச 23) நள்ளிரவு ஏரியின் மதகு உடைந்து ஏரியிலிருந்து நீர் கரைபுரண்டு சென்னாலூர், தின்னலூர் கிராம வேளாண் நிலத்தில் நீர் புகுந்தது.
வேளாண் நிலத்தில் சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு அறுவடைக்காக காத்திருந்த விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் மூட்டைகளை அடுக்கி அணை கட்டிய போதும் தொடர்ந்து ஏரியிலிருந்து நீரானது வெளியேறிக் கொண்டே உள்ளது.
வனத் துறைக்குச் சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியின் மதகை சரிசெய்ய கிராம பொதுமக்கள் அரசு நிர்வாகத்தினை நாடினால் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஏரி வனத் துறைக்குச் சொந்தமானது. எனவே அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதாகவும் வனத்துறை அலுவலர்களோ எங்களிடம் போதிய நிதியும் ஆட்களும் இல்லை என பதில் அளிப்பதும் கிராம மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: 6 மாதத்திற்கு மட்டும் தான் அம்மா மினி கிளினிக்கா?