விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொண்டை புண் சம்பந்தமாக சிகிச்சை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர், சுமார் 5 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து டார்ச்லைட் மூலம் சிறுவனுக்கு சோதனை செய்துள்ளார்.
இதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கரோனா காலத்தில் மனித நேயத்துடன் நோயாளிகளை கவனிக்க வேண்டிய மருத்துவரின் இச்செயலை கண்டு பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும், இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பாக பணியில் இருந்த மருத்துவர், விளக்கம் அளிக்கக் கோரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பணியில் இருந்த சுகாதார பணியாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: காய்கறிக் கூடையில் கஞ்சா பொட்டலம் - காவல் துறையிடம் சிக்கியது எப்படி?