விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ளது கோணமலை இருளர் குடியிருப்பு பகுதி. எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தப் பகுதியில் 18 குடும்பங்கள் மட்டுமே வசித்துவருகின்றன.
இந்நிலையில் இந்தக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்யும் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் தண்ணீர் சூழ்ந்து நின்றது. இதனால் அவரது உடலை அடக்கம் செய்யமுடியாமல், சின்னபையனின் மனைவி, உறவினர்கள் அவதிப்பட்டுள்ளனர்.
மேலும் அரசு சார்பிலும் இவர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த இரு தினங்களாக அவதிப்பட்டுவந்த இவர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட இருளர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்தவர்களின் முயற்சியால், கோணமலை கிராமத்துக்குள்பட்ட காட்டுப்பகுதியில் இடம் தேர்வுசெய்யப்பட்டு அங்கு சின்னபையனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
வல்லரசு கனவில் வளர்ந்துகொண்டிருக்கும் இந்தியாவில் ஆங்காங்கே உண்ண உணவும், இருக்க இடமும், அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு!