விழுப்புரம்: ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள ஆரோ ரச்சனா கைவினைப் பொருட்கள் செய்யும் கடையில் தமிழ்நாடு பழங்கால சிலைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கடையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் பிரெஞ்சை சேர்ந்த ஒருவர், பிரெஞ்சு நாட்டிற்கு 20 பழங்கால சிலைகள் மற்றும் கைவினைப்பொருட்களை கடத்துவதற்காக இந்திய தொல்லியல் துறையில் அனுமதிச்சான்றிதழ் பதிவு செய்ய திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிடைக்கப்பெற்ற சான்றிதழில் பதிவான முகவரியை வைத்து ஆரோவில் பிரெஞ்சு நேஷ்னல் வளாகத்தில் உள்ள பிரெஞ்சு நபர் டானா ஆரோவை தேடியபோது, 13 கல் சிலைகள், 4 உலோக சிலைகள், 1 மரம் கலைப்பொருட்கள், 1 ஓவியம் உள்ளிட்ட 20 கலைப்பொருட்களை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மீட்டனர்.
குறிப்பாக உலோக விநாயகர் சிலை, கிருஷ்ணன் ஓவியம், டொயினிக் கார்டனில் இருந்து நடமாடும் அப்சரா மரம், பெரிய பிள்ளையார், நடுத்தரப் பிள்ளையார், சிறிய பிள்ளையார், பெரிய புத்தர் சிலை, நடனமாடும் அப்சரா சிலை, விஷ்ணு கல் சிலை, பார்வதி கல் சிலை, ஐயப்பன் கல் சிலை சிறியது, பெரியது, நந்தி கல் சிலை, கையில் கத்தியுடன் கல் சிலை, டொரகோட்டா புத்தர் சிலை, உரையுடன் கூடிய வெண்கலச்சொம்பு, மயில் விளக்கு அனுமன் சிலை, முருகன் சிலை ஆகிய 20 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட 20 சிலைகளையும் பிரெஞ்சு நாட்டிற்கு கடத்த திட்டமிட்டிருப்பதும் தொல்லியல் துறை சான்றிதழ் வழங்காததால் சிலைகளை அங்கேயே விட்டுச் சென்றிருப்பதும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிலைகளை வைத்திருந்த பிரெஞ்சு நாட்டார் வெளிநாட்டில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 20 சிலைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எந்த கோயிலுக்குச் சொந்தமானது எனவும் எப்போது திருடப்பட்டது எனவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பூட்டிய வீட்டில் கைவரிசை ... 98 சவரன் நகைகள் கொள்ளை..!