விழுப்புரம் மாவட்டத்தில் சாலாமேடு, சித்தேரி கரை, வளவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழங்குடி இந்து மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்துவருகின்றனர்.
இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 2011ஆம் ஆண்டுமுதல் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் இதுவரை அவர்களுக்கு வழங்கப்படவில்லை.
ஆனால் அருகில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் பலருக்கு இந்து மலைக்குறவர் சான்று வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து அவர்களுக்கான சாதி சான்றிதழ் நிராகரிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று (செப்டம்பர் 28) தங்களுக்கான சாதி சான்றிதழ் கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் அங்கிருந்த அப்புறப்படுத்தினர். பின்னர் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க அனுமதி வழங்கப்பட்டது.