கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட களமருதூர் ஊராட்சியில் உள்ள கொரட்டங்குறிச்சி பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் மயானத்துக்குச் செல்லும் பாதை முறையாக அமைக்கப்படாத காரணத்தினால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயானத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பயிர் செய்வதாக உழவு ஒட்டி வைத்துள்ளார். இதனால் கிராமத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த லட்சுமி அம்மாள் என்பவரின் உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து இறந்தவரின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை நிரந்தரமாக அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சுடுகாடு செல்லும் பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே, தகவல் அறிந்து வந்த காவல்துறையினரும், அரசு அலுவலர்களும் உடனடியாக பாதையை சீரமைத்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: மூன்று தலைமுறைகளாக மயானத்திற்குப் பாதையின்றி தவிக்கும் கிராம மக்கள்!