விழுப்புரம் மாவட்டம் மேல் நாரியப்பனூரில் புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, சேலம் - விருத்தாசலம் மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சின்னசேலம் வரை இன்று முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் இன்று சின்னசேலம் சென்று மீண்டும் சேலம் வந்தடைந்தது.
இந்த ரயில் சேலம் ஜங்ஷனில் பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு சேலம் மார்க்கெட் , சேலம் டவுன் ரயில் நிலையம், அயோத்தியாப்பட்டணம், மின்னாம்பள்ளி வழியாக வாழப்பாடிக்கு பகல் 12.04 மணிக்கும், பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் வழியே சின்ன சேலத்திற்கு 1.30 மணிக்கு வந்தடையும்.
மறுமார்க்கத்தில் சின்னசேலத்திலிருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மேல் நாரியப்பனூருக்கு 1.58 மணிக்கு சென்று அங்கிருந்து ஆத்தூருக்கு பகல் 2.21 மணிக்கும், வாழப்பாடிக்கு பகல் 2. 55 மணிக்கும் வந்தடையும். இதன் பின்னர் சேலம் ஜங்ஷனுக்கு மாலை 4 மணிக்கு வந்து சேரும் . இந்தசிறப்பு ரயில் சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.