விழுப்புரம் நந்தனார் தெருவில் வசிப்பவர் ஆதி. இவர் சிறுவயது முதலே தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் கற்று தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்று உள்ளார். ஆதி தற்போது 'மல்லன்' என்ற பெயரில் மல்லர் கம்பம் பயிற்சிக்கூடம் அமைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார். இவரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் காலை, மாலை என இரு வேளைகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரிகாலன், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், புதுச்சேரியை சேர்ந்த ராஜாமுத்து, சபரிநாதன், சென்னையைச் சேர்ந்த சந்தானம் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் ஆகியோர் இணைந்து 'கை கொடுக்கும் கை' என்ற அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். மேலும் திரைப்பட இயக்குநர் லாரன்ஸ் நடன குழுவில் இணைந்து பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் ஏழு பேரும் வித்தியாசமான முயற்சியாக மல்லர் கம்பம் கற்க நினைத்து பயிற்சியாளர் ஆதியை அணுகியுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றார்போல் அவர்களுக்கான பயிற்சியை அளித்து வருகிறார் ஆதி.
உடல் குறைபாடுகள் இல்லாதவர்கள் மட்டுமே மல்லர் கம்பம் கற்க முடியும் என்ற பிம்பத்தை மாற்றி, தற்போது ஒரு கை, இரண்டு கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிகளும் மல்லர் கம்பம் கற்க முடியும் என இந்த மாற்றுத்திறனாளிகள் நிரூபித்துள்ளனர். இதன்மூலம் தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மல்லர் கம்பம் பயிற்சி பெரும் மாற்றுத்திறனாளிகள் என்ற பெயர் இவர்களுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: எலும்பு முறிவு ஏற்படக் காரணமான பிரிட்னி ஸ்பியர்ஸின் நடனம்