விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் அரசுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று (ஜன.9) திட்டமிட்டபடி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், போக்குவரத்துக் கழகங்களுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஜனவரி 9ஆம் தேதியான இன்று முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என கடந்த 5ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்று (ஜன.8) மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் ஆகியவற்றின் மேலாண் இயக்குநர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர். பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
சென்னை, திருச்சி உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து முனையத்திற்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும், டிப்போவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வார காலம் மட்டும் உள்ள நிலையில், பயணிகள் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் போராட்டத்தினால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயுள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 12ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இன்று பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழுப்புரம் கோட்டம் சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விழுப்புரம் கோட்டம் உள்ளடக்கிய விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களின் சார்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதையடுத்து, அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக, அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளை பணிமனைகளில் முறையாக பராமரிப்பு செய்திடவும், தடையின்றி இயக்குவதற்கும் அனைத்து பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தேவை இருப்பின் ராணுவ ஓட்டுநர்கள் மூலம் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மூலமாக பாதுகாப்பான பேருந்து இயக்கம் கண்காணிக்கப்பட்டு, உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும், உரிய பாதுகாப்புடன் பயணிகளுக்கு எவ்வித சிரமம் இன்றி பேருந்துகள் இயக்கப்படும்” என விழுப்புரம் கோட்டம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து புறப்படும்? - முழு விவரம்!