விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலமாக விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளர் ரமேஷ்குமார், வர்த்தக பிரிவு மேலாளர் ஐங்கரன் ஆகியோர் பலரிடமும் லஞ்சம் பெற்று கொண்டு பல்வேறு இடங்களில் புதியதாக ஆவின் பாலகங்களை அமைத்து தருவதாக புகார் எழுந்தது.
மேலும், ஆவின் பால் பொருட்கள் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் ஜெயலட்சுமி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர், விழுப்புரத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நேற்று (ஜூன்.15) அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று பிற்பகல் முதல் நடைபெற்று வந்த இச்சோதனையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓர் ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் புதியதாக ஆவின் பாலகங்களை அமைக்க உத்தரவு வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்வதில் முறைகேடு, பால் சுத்திகரிப்பு இயந்திரங்களைக் கொள்முதல் செய்ததில் முறைகேடு என சுமார் ரூ.3 கோடி ரூபாய அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதற்கான முக்கிய ஆவணங்களை ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விழுப்புரம் ஆவின் நிறுவன பொது மேலாளர் ரமேஷ்குமார், வர்த்தக மேலாளர் ஐங்கரன் உள்ளிட்டோரிடம் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படுவது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்