விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் விழுப்புரத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது புதூர் எல்லைக்குட்பட்ட சாலையோரப் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இயற்கை உபாதை கழிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த வயலில் வேலை செய்துகொண்டிருந்த, பெண் இதனை தவறாக நினைத்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அருகிலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்களும் ஓடிவந்து சக்திவேலைப் பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு உறவினர்களிடத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் படுகாயமடைந்த சக்திவேலை, அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடலை காவல் துறையினர் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து அவரது சகோதரி தெய்வானை கூறும்போது, "சக்திவேல் மீது சந்தேகத்தின் பேரில் பழிசுமத்தி அடித்துக் கொன்றுள்ளனர். கை, கால்களை கட்டிப்போட்டு, அவரை பேசவிடாமல் அடித்துக் கொலை செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கடுமையாகத் தண்டிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
சக்திவேலின் சித்தப்பா வேலு என்பவர் கூறும்போது,"சாலையோரம் இயற்கை உபாதை கழிக்கச் சென்றவரை தவறாக நினைத்து அங்கிருந்தவர்கள் அவரை அடித்துள்ளனர். இவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இச்சம்பவம் விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காணாமல் போன இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு - காவல்துறையினர் விசாரணை