சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர்12) தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தினரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளுடன் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வினை மாவட்டச் செயலாளர் எத்திராஜ் கேக் வெட்டி தொடங்கிவைத்தார். பின்னர் நலத்திட்ட உதவி கொடுக்க ஆரம்பித்தவுடன் மக்கள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துகொண்டு வாங்கி சென்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட செயலாளர் பாதிலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மேலும் இந்நிகழ்ச்சி சாலையோரத்தில் நடைபெற்றதால் அங்கு திரண்டிருந்த மக்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் சாலையில் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஒரு சிலருக்கு மட்டுமே நலத்திட்ட உதவி கிடைத்த நிலையில் விரக்தியடைந்த பொதுமக்கள் ரஜினி ரசிகர்களை திட்டி சென்றனர். வானூர் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அதிருப்தியுடன் பாதியிலேயே காரில் ஏறி சென்றது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.