மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் முஸ்தாக்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 350க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மமக மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, "அரசியல் சாசனச் சட்டத்துக்கு எதிரான ஒரு சட்டத்தை, மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் விதமாக நடைமுறைபடுத்தக்கூடாது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற திட்டங்களை திரும்பப்பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மக்களுக்கு பச்சை துரோகம் செய்துள்ளது. இதற்கு பதில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களைப்போல் தமிழ்நாட்டிலும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: