புதுச்சேரியிலிருந்து அடிக்கடி மது பாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரின் உத்தரவின்பேரில், காவலர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பனையபுரம் சோதனைச் சாவடி, கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடி, கண்டை கூட்ரோடு ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விழுப்புரம் நோக்கி வந்த நான்கு வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்தபோது, புதுச்சேரியிலிருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 2,000 மதுபாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சிவராஜ், விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரி முழுவதும் குட்கா சப்ளை செய்த நபர் அதிரடி கைது!