விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்டது ராம்பாக்கம் கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்நிலையில், இந்தக் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவந்த 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு 1972ஆம் ஆண்டு இலவச மனையுடன் கூடிய தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன.
ஆனால், அப்போது விடுபட்ட 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலர்களை நேரில் சந்தித்து மனுக்கள் அளித்தும் எந்தவித பயனுமில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அரசின் இலவச பட்டா இல்லாததால் அவர்களுக்கு வங்கிக் கடன், கல்விக் கடன், அரசின் தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: அனுமதியில்லாமல் எண்ணெய் கிணறு அமைக்கும் ஓஎன்ஜிசி - நிலத்தை மீட்டுத்தர விவசாயி கோரிக்கை