விழுப்புரம்: சின்னசேலம் தொகுதியில் 1991-1996 காலக்கட்டத்தில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பரமசிவம். இவர், தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, கடந்த 1998ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த, இந்த வழக்கை நீதிபதி இளவழகன் விசாரித்தார்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமாக 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாயும், இந்த அபராதத்தொகையை கட்டத்தவறினால் கூடுதலாக ஒராண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும்.
மேலும், 1991 டிசம்பர் மாதம் முதல் 1996 மே மாதம் 13ஆம் தேதி வரை இவரால் வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் அரசுடையாக்கப்படும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.