விழுப்புரம்: திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் க. அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய கனிமொழி, "பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அண்ணாவின் வழி நின்று, கருணாநிதியின் கைகோர்த்து, அடிப்படை உறுப்பினராக வலம் வந்து திமுக பொதுச் செயலாளராக இருந்த நமது பேராசியர் அன்பழகனை மீண்டும் நாம் பார்ப்பது மிகவும் கடினம். அவர் தன்னை பற்றி எந்தவொரு இழுக்கு வந்தாலும் கோபப்பட மாட்டார். அதேநேரம் தமிழுக்கோ தமிழ் மக்களுக்கோ சிறு இழுக்கு வந்தால் கோபத்தில் பொங்கி எழுவார்.
பாஜக அரசு தங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலங்களில், தங்களுக்குரியவர்களை ஆளுநர்களாக நியமித்து அவர்கள் மூலம் மாநிலங்களின் ஆட்சியை முடக்க முயல்கிறார்கள். ஆர்எஸ்எஸ் என்ற காவி சாயம் பூசிய அமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். மாநில அரசுகள் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே ஆளுநர்களை நியமித்துள்ளனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன. பல இளைஞர்கள் தங்களுடைய பணத்தினை இழக்கின்றனர். மக்களின் நலன் கருதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இத்தகைய ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அதனை அமல்படுத்துங்கள் என்று ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் ஒப்புதல் தர ஏன் மறுக்கிறார். இது தொடர்பாகப் பல முறை நமது சட்டத்துறை அமைச்சர் ஆளுநரை நேரில் சந்தித்து விளக்கமளித்துவிட்டார். இருந்த போதிலும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.
அன்றே நமது பேராசிரியர் அன்பழகன் ஆளுநர் பதவி என்பது எதற்கு, ஆட்சி அமைக்காத மாநிலங்களின் வளர்ச்சியை சீர் குலைப்பதற்காக குரைப்பதற்கும், கடிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்படுகின்ற என்று கூறியிருந்தார். தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பு குறைந்து விட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், ஒரு காலத்திலும் தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முடியாது. இந்தி திணிப்பிற்கான எதிர்ப்பும் இன்னும் நீர்த்துப் போகவில்லை. திமுக இதனை ஒருபோதும் ஆதரிக்காது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறைக்கு சென்றிருக்கிறாரா.? - உதயநிதியை விளாசிய சிவி சண்முகம்