விழுப்புரம்: திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ ராகவேந்திரா பிரிண்டர்ஸ் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நடுவந்தல் புதூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வாக்காளர் அடையாள அட்டையை போலியாகத் திருத்தம் செய்திருக்கிறார்.
போலியாக திருத்தம் செய்யப்பட்டு அச்சிடப்பட்ட அந்த வாக்காளர் அடையாள அட்டையை சாட்சி ஆவணமாகப் பயன்படுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் திருத்தம் செய்யும் அலுவலகத்தில் கொடுத்து, தன் ஆதார் அட்டையிலும் தனது விலாசத்தை திருத்தம் செய்ய அவர் முயன்றுள்ளளார்.
அடையாள அட்டையைக் கண்டு சந்தேகப்பட்ட இ சேவை மைய அதிகாரி தாசில்தாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த அடையாள அட்டையை சோதித்துப் பார்த்தபோது, அதில் இருப்பது 'தேர்தல் பதிவு அதிகாரி'யின் கையொப்பம் இல்லை என்பதும், அது போலியான வாக்காளர் அடையாள அட்டை என்பதும் தெரியவந்தது.
இது குறித்துத் திண்டிவனம் துணை ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டை திருத்தம் செய்யப்பட்ட இடம் குறித்து செல்வராஜிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
சுரேஷின் கம்ப்யூட்டர் மையத்திற்கு நேரில் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, போலியாக ஆவணங்களை அந்த சென்டரில் தயாரித்தது தெரியவந்தது. அங்கிருந்த மூன்று கணினி மற்றும் பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த மையத்திற்கு அதிரடியாக சீல் வைத்து கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை வழக்கு: பெண் ஐபிஎஸ் அலுவலரிடம் 12ஆவது முறையாக குறுக்கு விசாரணை