விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கபடி, கைப்பந்து, கால்பந்து, மல்லர் கம்பம் போட்டிகள் நேற்று (செப் 26) நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டியினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட ஆட்சியர் பழனி கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டியில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
அப்போது கபடி போட்டியினை துவக்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "கல்லூரி மாணவர்களோடு நானும் சேர்ந்து விளையாடுவேன். யாரும் என்னை அவுட் செய்யக் கூடாது" என கூறியபடி மற்ற விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாடினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் தனித்திறன் மேம்படும் வகையில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு, ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள் 10 மையங்களில் நடத்தப்பட்டன. இதில், அரசு கலை மற்றும் கல்வியியல் கல்லூரிகள், பொறியியல், சட்டக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையத்தினர் உள்பட 75 கல்லூரிகளைச் சோந்த 3,000 பேர் பங்கேற்றனர்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் மொழி, வரலாறு சார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதன் மூலம், தமிழ் மொழியின் மாண்பு காக்கப்படுவதுடன், அடுத்து வரும் தலைமுறையினருக்கும் பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம் தமிழ் மொழி தழைத்தோங்கும்.
பெண்கள் உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்குப் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், உயர் கல்வி பயிலும் மாணவிகளின் விகிதம் அதிகரித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்கு பல்வேறு கலை, விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தி வருகிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: நந்தி வாயிலிருந்து கொட்டும் நீர்! குவியும் மக்கள்! எங்க தெரியுமா?