புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன்(70). இவர் அம்மாநில அதிமுக செயலாளராக உள்ளார். இன்று காலை புதுச்சேரி - தமிழக எல்லையான ராதாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட புருஷோத்தமன் சென்றுள்ளார்.
அப்போது வயல் வெளியில் இருந்த விஷவண்டு அவரை தாக்கியுள்ளது. இதில் மயக்கமடைந்த புருஷோத்தமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடல்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், குமுதன் என்ற மகனும், 5 மகள்களும் உள்ளனர். புருஷோத்தமன் 2014ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஆகும்.
இவர் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து அண்மையில் காலமான திமுகவைச் சேர்ந்த ராதாமணியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.