விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 19ஆம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் போலியோ மருத்துவக் கண்காணிப்பு அலுவலர் சாய்ராபானு, இணை இயக்குநர் சண்முக கனி, துணை இயக்குநர் செந்தில்குமார், சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை பேசும்போது, "வருகிற 19ஆம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அரசு மருத்துவக்கல்லூரி, அனைத்து பொது மருத்துவமனை, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 437 இடங்களில் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்த முகாம் மாலை 5 மணிவரை நடைபெறும்.
ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், தவறாமல் இம்முகாம்களில் கலந்துகொண்டு ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்கள் முன்கூட்டியே பொதுமக்களிடம் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள்: சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் வலைவீச்சு