திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சிவபெருமான் திருநடனம் ஆடிய பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிர சபை அமைந்துள்ளது. இங்கு கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தரால் ‘திருநெல்வேலி பதிகம்’ பாடப்பட்டது.
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றுள் மிக முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நடராஜருக்கு நடைபெறும் திருவாதிரை பெருந்திருவிழா ஆகும். இந்த திருவிழா ஜனவரி 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடராஜர் சன்னதியில் ஹோமங்கள் வளர்த்து, சுவாமி, அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகமும், அதிகாலையில் பெரிய சபாபதி சன்னதியில் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடல்களைப் பாடியும், நடன தீபாராதனையும் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் 10ஆம் நாளான இன்று (ஜனவரி.13) அதிகாலையில் தாமிர சபையில் சிவபெருமான் நடனக்காட்சியான ‘ஆருத்ரா தரிசனம்’ நடைபெற்றது. சிவபெருமானின் திருநடனக்காட்சியை காண நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள், 63 நாயன்மார்கள், பாண்டிய மன்னன் ஆகியோர் தாமிர சபை முன் எழுந்தருளினர்.
இதையும் படிங்க: முருகனுக்கு அரோகரா போட்ட அமெரிக்க பக்தர்கள்! வைரலாகும் வீடியோ!
முதலில் அதிகாலை 1.00 மணி அளவில் நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு உடனுறை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கண்ணாடி முன் பசு தீபாராதனையும், அதனை தொடர்ந்து தாமிர சபையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஸ்ரீ நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், ஓதுவாமூா்த்திகள் திருவெம்பாவை பாடல்களை இசையுடன் பாட திருவெம்பாவை தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம், நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது. தாமிர சபை முன் நாதஸ்வரம் இசைக்க கைலாய வாத்தியங்கள் முழங்கிட வேதங்கள் ஓத பஞ்சபுராணம் பாடியபடி 11 முறை ஸ்ரீ நடராஜர் திருநடனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியை தரிசித்தனர். பக்தர்களுக்குச் சிறப்புப் பிரசாதமாகத் திருவாதிரைக்களி வழங்கப்பட்டது. விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.