கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமம் அம்மன்கொல்லைமேடு. இந்த கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மணிமேகலை என்பவரது உறவினர் அய்யம்பெருமாள் வீட்டில் பட்டப்பகலில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணிக்கு அய்யம்பெருமாளின் மனைவி சின்னப்பொன்னு தமது விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றுவிட்டார். பின்னர் மாலை 6 மணியளவில் வீட்டில் வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் தங்க நகை, 750 கிராம் வெள்ளி கொலுசு மூன்று ஜோடிகள் காணாமல் போயிருப்பது தெரியவந்ததுள்ளது. பின்னர் கொள்ளை சம்பவம் குறித்து திருக்கோவிலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த திருக்கோவிலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாடியின் வழியாகக் கொள்ளையர்கள் வீட்டினுள் இறங்கிக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என கூறியுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவமும் சேர்த்து திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இது வரை கொள்ளை சம்பவம் ஆனது 10க்கும் மேற்பட்ட வீடு, மூன்று கோயில்கள், நான்கு அரசு டாஸ்மாக் கடைகளில் நிகழ்ந்துள்ளது.
மேலும், மூன்று ஏடிஎம் மையங்களில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் கொள்ளை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மேற்பார்வையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவரும் நிலையில், தற்போது இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுவரை சுமார் ரூ. 50 லட்சத்திற்கும் மேலாகக் கொள்ளைபோயுள்ள நிலையில், இதுவரை காவல் துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை