விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மேஸ்திரியாக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவர் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை என்ற கிராமத்தில் மனைவியின் வீட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி அருகே உள்ள காரனூருக்கு ராமச்சந்திரன் வந்துள்ளார். ஏற்கனவே, இவர்களது குடும்பத்தினருக்கும் இவர்களது பெரியப்பா குடும்பத்தினருக்கும் நில பிரச்னை நடந்துள்ளது. எனவே, நேற்றிரவு ராமச்சந்திரனை ஊருக்கு செல்லுமாரு அவரது சகோதரர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், நேற்று காலை காரனூர் ஏரிக்கரை தடுப்பு பாலத்தின் அடியில் பிணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமையிலான காவல் துறையினர், ராமச்சந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நில பிரச்னை காரணமாக ராமச்சந்திரன் கொலை செய்யபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .