விழுப்புரம்: வீரபாண்டி மலைப்பகுதியில் மறைத்து வைத்திருந்த ஆயிரத்து 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை காவல்துறையினர் கண்டுபிடித்து அழித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி கிராம மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அரகண்டநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான காவலர்கள் இன்று(செப்.13) சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த மலைப் பகுதியில் சுமார் ஆயிரத்து 500 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் அந்த இடத்திலேயே ஊறல்களை கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக, வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.