விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து இருந்த ஆட்டோவை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளார். இச்சம்பவம், நடைபெற்ற ஒரு வாரத்திலே மற்றொரு ஆட்டோவும் மர்ம நபர்களால் திருடப்பட்டது.
அதைப்போல, சின்னசேலம் பகுதியில் வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவும் திருடப்பட்டது. கடந்த மாதம் இரண்டு ஆட்டோக்கள் திருட்டு போன நிலையில், காவல்துறையினர் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன் சங்கராபுரம் பகுதியில் ஆத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆட்டோவை திருடிச் செல்லும் போது, காவல்துறையினரின் வாகனச்சோதனையில் சிக்கினார்.
அப்போது, அவர்களின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் ஐந்து ஆட்டோக்களை திருடியதாக ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். மேலும், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் விழுப்புரம், சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் மணிகண்டனின் கூட்டாளியான முனியன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து ஆட்டோக்கள் திருடு போகும் சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.