விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் ஆலமரம் ஒன்றில் இருந்த அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் 100-க்கும் மேற்பட்டவை இறந்துகிடந்தன. இதனையடுத்து வனத் துறை அலுவலர்கள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், புதுச்சேரியைச் சேர்ந்த சஞ்சீவி (எ) ரவி (31), அவரது சகோதரரான பிரபு, கோபி ஆகிய மூவரும் இறைச்சிக்காக ஆலமரத்தில் ஏறி பறவைகளுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. இதையறிந்து புதுச்சேரி விரைந்த விழுப்புரம் மாவட்டம் வனத் துறையினர், அவர்களைக் கைதுசெய்ய முற்பட்டனர்.
அப்போது, பிரபு, கோபி ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். சஞ்சீவியை மட்டும் கைதுசெய்த வனத் துறையினர் வானூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர், இவர்கள் மூவரும் ஆரோவில், வானூர் பகுதிகளில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள பறவைகள், விலங்குகள் வேட்டையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், வேட்டையாடிய விலங்குகளை அருகில் உள்ள பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்துவருவதாகவும் சஞ்சீவியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் பறவைக் காய்ச்சல் உறுதி