விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள பைத்தந்துரை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தின் மையப் பகுதியில் பெண் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாராயம் விற்பனை செய்துவருகிறார்.
இதுவரையில் இக்கிராமத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் சாராயம் குடித்து உயிரிழந்திருப்பதாகவும், மேலும் தற்போது சாராயம் குடித்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஐந்து பேர் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இங்கு சாராயம் விற்பனை மேற்கொண்டுவருவது குறித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி அப்பகுதி வழியாக சென்ற அரசு பேருந்தை பொதுமக்கள் இன்று சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெண்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இன்று மாலை சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.