விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள ராஜாஜி நகர் பகுதிக்கு, நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் ராஜாஜி நகருக்கு 25 நாட்களுக்கு மேலாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராஜாஜி நகர் பகுதி மக்கள், கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பளையம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே லட்சியம் கிராமத்தில் காலிக்குடங்களுடன் பேருந்துகளை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். அங்கும் காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.