விழுப்புரம்: 38ஆவது நாளாக நடைபெற்றுவரும் கள் இறக்கி விற்கும் உரிமை மீட்புப் போராட்டம் குறித்து தமிழ்நாடு கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'விக்கிரவாண்டி வட்டம், நரசிங்கனூர் - பூரிகுடிசைப்பகுதியில் பல ஆண்டுகளாக அடக்குமுறைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட பனையேறிகள் இயக்கமாக ஒருங்கிணைந்து தங்களின் உணவும் உரிமையுமான கள்ளை மீட்டெடுக்கும் விதமாக, 'தமிழ்நாடு கள் இயக்கம்' நடத்திவரும் கள் இறக்கி விற்கும் அறப்போராட்டத்தில், 'தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கத்தை' இணைத்துக்கொண்டு கடந்த 38 நாட்களாகத் தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் கலப்படமற்ற இயற்கையான கள்ளை மட்டுமே இறக்கி, தங்கள் பயன்பாட்டுக்குப் போக வாழ்வாதாரத்திற்காக கள் விற்பனை செய்ய வேண்டும் எனவும்;
கள்ளை மீட்டெடுக்கும் இந்த ஒற்றை கோரிக்கையின் காரணமாக யாருக்கும் லஞ்சம், மாமூல் போன்றவைகளை தரமாட்டோம் எனவும், கோரிக்கை வெற்றிபெறும் வரை நேர்மையோடும் அறவழியிலும் போராடுவோம் எனவும் உறுதிபூண்டுள்ளனர்.
இந்நிலையில் காவல் துறையினர் தனது கோர முகத்தை பனையேறும் தொழிலாளர்களின் மீது காட்டத் தொடங்கியுள்ளனர். கஞ்சனூர் காவல்நிலையம், பெரியதச்சூர் காவல்நிலையம், செஞ்சி மதுவிலக்குப் பிரிவு மற்றும் விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவு ஆகியவற்றிலுள்ள காவல் துறை அலுவலர்கள் பனையேறும் தொழிலாளர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நாள் முழுவதும் வைத்திருந்து வழக்குப் போட்டு அனுப்புகின்றனர்.
இதுவரை ஒரே ஊரைச் சேர்ந்த 34 தொழிலாளர்களைக் கைது செய்து, அலைக்கழித்திருக்கிறது, காவல்துறை. எங்கள் போராட்டத்தை நீர்த்துப்போக செய்து பழையபடி லஞ்சம், மாமூல் போன்றவைகளை கொடுக்க வைத்துவிட வேண்டுமென பல வகையிலும் முயற்சிக்கின்றனர்.
பிணத்தை வைத்து மிரட்டல்
பனையேறிகளைக் கைது செய்து அவர்களின் தொழிலை முடக்கினர். கைது செய்யப்படும் பனையேறிகளிடமிருந்து கைப்பற்றப்படும் உபகரணங்களை (கத்தி, இடைகயிறு, பெட்டி,...,)திரும்பக் கொடுப்பதுமில்லை. நீதிமன்றத்தில் ஒப்படைப்பதுமில்லை.
வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்தப்படுகிறது. கள் அருந்த வரும் நபர்களின் இருசக்கர வாகனங்களைத் தூக்கிச் செல்வது, அவர்களை மிரட்டி 500 ரூபாய், 1000 ரூபாய் என வாங்கி மீண்டும் கள் அருந்த வராதவண்ணம் அச்சுறுத்துகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்களைக் கைது செய்து உளவியல் ரீதியாகவும் மிரட்டுகிறார்கள்.
இதுமட்டுமின்றி, காவல் துறையினருக்கு தொழிலாளர்கள் இணங்காவிட்டால் அவர்களே ஒரு நபரை அனுப்பி, கள் வாங்கி குடித்துவிட்டு தகராறு செய்ய வைத்து, வழக்குத் தொடுக்கின்றனர்.
அல்லது எங்கேயாவது விபத்தில் இறந்து போன பிணத்தை ஊரில் கொண்டுவந்து போட்டு, கள் குடித்ததால்தான் விபத்து ஏற்பட்டு இறந்தார் என நிரந்தரமாக ஊரைக் காலி செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். காவல்துறையை எதிர்த்து உங்களால் எதுவும் செய்ய முடியாது என்பது போன்ற அச்சுறுத்துகின்றனர்.
கள்ளை மீட்டெடுக்கப் போராட்டம்
நாங்கள் காவல் துறைக்கோ வேறு யாருக்கோ எதிரானவர்கள் இல்லை. எங்கள் உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைத்து அறவழியில் போராடிக்கொண்டிருக்கும் தொல்குடிகள். எங்களின் இந்தத் தொடர் போராட்டத்தில் நேரில் வந்து பங்கு பெற்று ஆதரவு அளிக்க விரும்பும் அனைவரையும் அழைக்கிறோம். அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயக்கம், அமைப்பு, சங்கங்கள் சார்ந்த அனைவரின் ஆதரவையும் நாடுகிறோம்.
மேலும் எங்கள் ஊரில் நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளையும், மனித உரிமை மீறல்களையும், எங்கள் அறவழிப் போராட்டத்தையும் ஆவணப்படுத்தும்படி தொலைக்காட்சி ஊடகங்களையும், செய்தி ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
கள்ளை மீட்டெடுக்க முன்னெடுத்திருக்கும் இந்தப் போராட்டத்தில் ஏற்பு இருந்தால் ஆதரவு தெரிவியுங்கள், அல்லது கள்ளும் தடைசெய்யப்படவேண்டிய போதைப்பொருள் தான் என்றால் நேரில் வாதிட வாருங்கள்’ என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வலிமை படம் பார்த்த மலேசிய அமைச்சர்