விழுப்புரம்: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 22ஆம் தேதி இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூன் 23) காலை 11.30 மணியளவில் சலசலப்புடன் நிறைவு பெற்றது.
இதில் 23 தீா்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் கூறினாா். அதற்கு கூட்டத்தினா் பலத்த கரகோஷத்துடன் ஆதரவு தெரிவித்தனா்.
பின்னர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில், 'கட்சியை பிளவுபடுத்த பிரிந்து சென்ற ஓபிஎஸ் மீண்டும் தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள பொது மன்னிப்புக்கேட்டதால் மட்டுமே, புதியதாக சட்டத்திருத்தம் கொண்டு வந்து ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், அப்பதவியும் காலாவதியாகிவிட்டது. இனி ஓபிஎஸ்க்கு எந்தப் பதவியும் இல்லை' என்று கூறினார்.
தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவருடனும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வரும் சி.வி. சண்முகம் இன்று(ஜூன் 24) விழுப்புரம் அதிமுக தலைமைக் கழக அலுவலகம் மற்றும் விழுப்புரம் நகர் முழுவதும் உள்ள சுவரொட்டி விளம்பரங்களில், வெள்ளை பெயின்ட் கொண்டு ஓபிஎஸ்ஸின் படம் மற்றும் பெயரை அழிக்க தன்னுடைய ஆதரவாளர்களுக்கு உத்தர விட்டுள்ளதாக தகவல் வந்துள்ளதை அடுத்து, விழுப்புரம் நகர் முழுவதும் உள்ள சுவரொட்டிகளில் ஓ.பன்னீர் செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயர்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மதுரையில் ரூ.10 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சங்கள் பறிமுதல்!