ஹைதராபாத்: ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்று (அக்.31) வெளியிட்டுள்ளன. இதில் கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் (டெல்லி கேபிடல்ஸ்), கே.எல்.ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்), ஸ்ரேயஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் அந்தந்த அணிகளில் தக்க வைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் மூவரும் மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ரிஷப் பண்ட்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 100-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரவிருக்கும் மெகா ஏலத்தில் அவர் அதிக விலைக்கு போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், தோனிக்குப் பிறகு அந்த இடத்திற்கு ஒரு மிகப்பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேர்வு செய்ய வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் அந்த இடத்திற்கு பண்ட் வரப்போகிறாரா? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல், டெல்லி அணியின் பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் தற்போது பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். இதனால் ரிக்கி பாண்டிங் அறிவுறுத்தலின்படி, ரிஷப் பன்ட் பஞ்சாப் அணிக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், மும்பை, பஞ்சாப், ஆர்சிபி ஆகிய அணிகளும் ரிஷப் பண்டை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
இதையும் படிங்க: தோனி முதல் கோலி வரை தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார்? ஐபிஎல் அணிகளின் முழு ரிடென்ஷன்ஸ் லிஸ்ட்!
கே.எல்.ராகுல்: கடந்த ஆண்டு ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா, மைதனாத்திலேயே ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் லக்னோ அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் கே.எல்.ராகுல் அடுத்து எந்த அணிக்குச் செல்லப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் அவர் ஆர்சிபி அணிக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
காரணம், அவர் ஆர்சிபி அணிக்காக ஏற்கனவே விளையாடியுள்ளார். மேலும், ஆர்சிபி அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த டூபிளசிஸ் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த இடத்தை ராகுல் நிரப்பலாம். அதேபோல் பஞ்சாப், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளும் ராகுலை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்ரேயாஸ் ஐயர்: கடந்த சீசனில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது, கேகேஆர் அணி. அப்போது அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஸ்ரேயஸ் டெல்லி அணிக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
காரணம், பண்ட் இல்லாத நிலையில், 2020ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஷை மீண்டும் கொண்டு வருவதற்கு டெல்லி அணி ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, எந்த வீரர் எந்த அணியில் இடம்பெறப் போகிறார் என்பது மெகா ஏலத்திற்கு பின்புதான் தெரியவரும்.