தேனி: தமிழ்நாடு முழுவதும் நேற்று தீபாவளி திருநாளை மக்கள் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் 2 இருசக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில், 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், 2 இருசக்கர வாகனங்களில் 5 இளைஞர்கள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்ட அப்பகுதியினர், உடனடியாக அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், இந்த விபத்தில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 2 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பின்னர், தகவலறிந்து வந்த கூடலூர் காவல் நிலைய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய 5 இளைஞர்களும் கூடலூர் பகுதியில் ஒரே தெருவைச் சேர்ந்த நண்பர்கள் எனவும், அவர்கள் லிங்கேஷ்(24), சேவாக்(23), சஞ்சய்(22), மோனிஷ்(22), கேசவன்(22) என்பதும், தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தில் விளையாடிக் கொண்டு, அதிவேகத்தில் வந்ததே விபத்துக்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் லிங்கேஷ், சேவாக், சஞ்சய் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மோனிஷ் மற்றும் கேசவன் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தீபாவளி கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 இளைஞர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்