விழுப்புரம்: ஆரோவில் பகுதி அருகே நேற்று (செப்.18) சிலை விற்பனை செய்யும் நிலையத்திலிருந்து 7 ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த உலோகச்சிலைகளை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதே பகுதியில் மற்றொரு சிலைகளை வைத்திருக்கும் நபரிடம் இது போன்ற ஆவணமின்றி சிலைகள் இருப்பதாக காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (செப்.19) காலை அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மரோமா எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீக ரெட்டி என்பவரின் மனைவி லாரா ரெட்டி, ஒரு சிவகாமி உலோக சிலை, ஆஞ்சநேயர், நாகதேவதை, சிவன் ஆகிய மூன்று கற்சிலைகள் என மொத்தம் நான்கு சிலைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச்சிலைகள் தொடர்பாக காவல் துறையினர், லாரா ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தங்கள் குடும்பம் விஜயநகர பேரரசு காலத்தில் இருந்து பணியாற்றியதாகவும், தங்களுடைய மூதாதையர் இந்த சிலைகளை தங்களிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என காவல் துறையினர் கேட்டதற்கு, அவர்களிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, இந்த சிலைகள் நான்கையும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர், பறிமுதல் செய்து தொல்லியல் துறைக்கு இந்த சிலைகளின் தொன்மை குறித்தும் தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டு இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்த அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “உரிய ஆவணங்கள் இன்றி சிலை வைத்திருந்தால், அது திருட்டு சிலையாக இருக்கும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தங்களுடைய மூதாதையர்கள் வழங்கிய இது போன்ற சிலைகள் தொன்மையான சிலைகளா? இல்லையா என்பது குறித்து தெரியாமலேயே வைத்திருப்பவர்கள் அதற்குரிய ஆவணம் இருந்தால் இந்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்து தங்களது பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்தால் உடனடியாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், தற்போது விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற சிலைகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்து சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையிலேயே நேற்று ஏழு சிலைகள், இன்று நான்கு சிலைகள் என தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: வரதட்சணை வழக்கு - 2 ஆண்டுகளாக தேடப்பட்ட கணவன் கைது