விழுப்புரம்: புதுச்சேரி - கடலூர் வரை மாநில பட்டியலினத்தவர்,பழங்குடியினர் பணிக்குழு செயலாளர் அற்புதராஜ் மற்றும் பணிக்குழு தலைவர் ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரும், ஆகஸ்ட 10 ஆம் தேதி 2000 பேர் ஒன்று கூடி தங்களுக்கான கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், “1950 ஆம் ஆண்டுஆகஸ்ட் 10 அன்று, இந்து அல்லாத மற்ற மதங்களைச்சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (SC) இட ஒதுக்கீட்டு ஆணை செல்லாது என்று வெளியிடப்பட்ட அரசாணை வழியாக, இந்து அல்லாத பிற மதங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்டோருக்கான சட்ட உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்ட கருப்பு நாள்.
இந்திய சாதிய சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லா நிலைகளிலும் சாதிய கொடுமைகள், சாதிய பாகுபாடுகள் மற்றும் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.
மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையில் இவ்வாறு வெளிவந்த ஆணையை எதிர்த்து, தொடர்ந்து 72 ஆண்டுகளாக மத்திய அரசிடம் குரல் எழுப்பி போராடி வருகிறோம். இதன் விளைவாக 1956 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட சீக்கியர்களும், 1990 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட பௌத்த சமயத்தவரும் மீண்டும் பட்டியலின பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், பிற சிறுபான்மை சமூகத்தினரும் எஸ்சி உரிமையை பெற முடியாமல் மத்திய அரசால் மறுக்கப்பட்டு பிசி பட்டியலிலேயே உள்ளனர்.
அமைதி வழியாகவும், சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வந்த வேளையில் 2004 அக்டோபர் 29 ல் உச்ச நீதிமன்ற பரிந்துரையின்பேரில் அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், 2007 மே 21 ல் தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தது.
அதில்,"1950 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசு ஆணையை ரத்து செய்து, அனைத்து மதங்களையும் சார்ந்த தாழ்த்தப்பட்டவர்களையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களையும் எஸ்சி பட்டியலில் சேர்க்கலாம்” என பரிந்துரை செய்தது. எனவே உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்.
அவற்றை அமல்படுத்த வேண்டும். எஸ்சி பட்டியலில் தலித் கிறிஸ்தவர்களையும், தலித் இஸ்லாமியர்களையும், மற்ற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த தலித் மக்களையும் சேர்க்க வேண்டும். அவர்களுக்கான சலுகைகளை வழங்க வேண்டும். சமூகநீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதே இந்த ஆகஸ்ட் 10 கருப்புநாள்.
இந்த நாளின் அனுசரிப்பில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர், இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆகஸ்ட் 10 ஆம் தேதி விழுப்புரத்தில் மாபெரும் போராட்டம் மற்றும் துக்க நாளாக அனுசரிக்கப்படும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்க தனி இணையதளம் - தமிழ்நாடு அரசு!