விழுப்புரம்: கடந்த 2011ஆம் ஆண்டு, திருக்கோவிலூர் காவல் துறை ஆய்வாளர் சீனுவாசன், உதவி ஆய்வாளர் ராமநாதன், தலைமைக் காவலர் தனசேகரன், காவலர்கள் கார்த்திகேயன், பக்தவச்சலம் ஆகியோர், நான்கு பழங்குடி இருளர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், விழுப்புரம் தனி நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனிடையே கடந்த 16-ம் தேதி மேற்படி வழக்கில் விழுப்புரம் தனி நீதிமன்றத்தில் ஆஜரான முதல் எதிரியும், தற்போதைய அரக்கோணம் காவல் ஆய்வாளருமான சீனுவாசன், நீதிமன்றத்திலிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இந்த நிலையில், வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், ஆய்வாளர் சீனுவாசனை உடனே கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடிகள் சங்கத்தினர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான பெண்களும் கலந்துகொண்டு, போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி முழக்கமிட்டனர்.
இதையும் படிங்க: மின்சார ரயில் நடைமேடையில் ஏறிய விவகாரம் - ஓட்டுநர் சஸ்பெண்ட்!