விழுப்புரம்: விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியில் பெரியார் படிப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகில் மார்பளவு பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப்பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் யாரோ சிலர் பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்ட நிலையிலும்; முகம், மூக்கு அமைக்கப்பட்டப்பகுதியில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை அதை அறிந்த அந்தப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையைச் சுற்றி கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்த நிலையில், கம்பி வேலியை உடைத்து அதற்குள் இருந்த சிலையை சேதப்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் யார் என விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து விழுப்புரம் நகரில் பதற்றம் ஏற்பட்டதைத்தொடர்ந்து, உடனடியாக பெரியார் சிலை சரி செய்யப்பட்டது.
சரி செய்யப்பட்ட பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிலை உடைப்புக்குக் காரணமான அடையாளம் தெரியாத நபர்களை உடனடியாக கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என திராவிட கழகத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு - சசிகலா தரப்பு விசாரணை நிறைவு