விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கரோனா இரண்டாவது அலையால் ஒட்டுமொத்த தேசமே திணறிவருகிறது. இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால்தான் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மோடி அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா தடுப்பூசியைக் கட்டணமின்றி இந்தியளவில் வழங்க வேண்டும். அதற்கான மொத்த செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும். தடுப்பூசி விலை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி தடுப்பூசி நிறுவனம் கொள்ள லாபம் அடிக்க மத்திய அரசே வழிவகை செய்வதுபோல் உள்ளது. எனவே மலிவான விலையில் கரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஆக்சிஜன் பற்றாக்குறை தமிழ்நாட்டிற்கு இல்லை என மத்திய அரசிடம் கூறிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு 50 விழுக்காடு ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகவும், தமிழ்நாட்டின் நிலையையும், ஆக்சிஜன் பற்றாக்குறையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையாக வாதிடவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொள்கிற அனைத்து முடிவுகளுக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க வேதாந்தா நிறுவன மேற்கொள்ளும் செயலுக்கு மத்திய மாநில அரசுகளையும், எதிர்க்கட்சியான திமுகவையும் உடன்பட செய்ய வேண்டும் என்பதால்தான் அவசர அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் நிறுவனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு இயங்கும் எனவும் இதனைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர், சுற்றுச்சூழல் பொறியாளர் கொண்ட குழுவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைக்கும் எனவும் அதில் 2 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவும் மத்திய அரசின் விருப்பத்திற்கேற்றவாறு அமைக்கப்படும் குழு என்பதால் ஏமாற்றத்தை தருகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தியை பொதுத்துறை நிறுவனங்களான பெல், என் எல் சி போன்ற நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மூடப்பட்ட வேதாந்தா நிறுவனத்தில் ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும்.
வேதாந்தா நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் ஸ்டெர்லைட் ஆலைகள் உள்ள போது அங்கு உற்பத்தி செய்யலாம் ஏன் தமிழ்நாட்டை குறிப்பிட்டு, உற்பத்தி செய்ய வேண்டும். இது முரண்பட்ட கருத்தாக இருந்தாலும் மக்களின் உயிர் முக்கியம் என்பதால் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை வரவேற்கிறோம். ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனுக்கு தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கு வங்க தேர்தலில் காட்டுகிற அக்கறையை கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்க மோடி அரசு செயல்படவில்லை. ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் பாதிப்பில்லை. ஆக்சிஜன் உருளைகளை கொண்டுசெல்வதில் தான் தாமதம் ஏற்படுகிறது. எனவே அந்த அந்த மாநிலங்களிலேயே ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்த பொதுமுடக்கம் வந்தால்கூட மக்கள் அதனை ஏற்க வேண்டும்" என வலியுறுத்தினார்.