விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35), உளுந்தூர்பேட்டையில் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். இவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மூலசமுத்திரம் பகுதியில் உள்ள துணை மின் நிலையம் அருகே செல்லும்போது, எதிரில் ஒரு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை இடித்து சாலையின் வலதுபுறத்தில் இருந்த பள்ளத்தில் தள்ளியுள்ளனர்.
பின்னர், சினிமா பட காட்சி போல் காரில் இருந்து பட்டாகத்தியுடன் இறங்கி வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், மணிகண்டனின் உடலில் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தியும், வெட்டியும் கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரை அப்படியே விட்டுவிட்டு உடனடியாக சிதறி ஓடியுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவலர்கள் ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கொலையாளிகள் குறித்தும் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த கும்பல் விட்டுச்சென்ற காரின் பதிவு எண்ணைக்கொண்டு காவலர்கள் விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செல்ஃபோன் திருடிய சிறுவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறை!