விழுப்புரம்: தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநராகவும், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் துணை ஆட்சியராகவும் பணியாற்றி வந்த பழனி என்பவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் இறுதியாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் நேற்று (பிப்.5) ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, ’மக்களுக்கு என்ன தேவையோ அதை தேடி சென்று செய்யுங்கள்; மக்களுக்காக தங்களது பணியை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், 'நான் கலெக்டராக வேண்டுமென்று எனது அப்பா மிகவும் விரும்பினார். ஆனால், தற்போது அதை பார்ப்பதற்கு என் அப்பா இல்லை' என கண்ணீர் மல்க வருத்தத்துடன் தெரிவித்தார்.
அப்போது உடனிருந்த சக அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர். மேலும், 'விழுப்புரம் மாவட்டம் தனக்கு மறக்க முடியாத நினைவுகளை அளித்துள்ளதாகவும், தன்னுடன் பணிபுரிந்த, பணிபுரிய உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி' எனவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் தனது தந்தையை நினைத்து கண்கலங்கிய சம்பவம் அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது.
இதையும் படிங்க: அறிவு, பட்டம் பெற்றவர்கள் மீண்டும் பல்கலை.க்கு ஏதாவது செய்ய வேண்டும் - செளமியா அன்புமணி