உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயில், விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் இரண்டாம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம் 2019' அழகி போட்டி விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முதல் சுற்றுக்கான இந்தப் போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் கலந்துகொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
இறுதியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய 15 திருநங்கைகள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த இறுதிச்சுற்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. திருநங்கை தினமான இன்று சிறப்பான முறையில் திறமையை வெளிப்படுத்தும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர். 'மிஸ் கூவாகம் 2019' அழகிப் போட்டியில் தருமபுரியைச் சேர்ந்த நபீஸா முதலிடம் பெற்று ’மிஸ் கூவாகம் 2019’ பட்டத்தைத் தட்டிச் சென்றார். கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாம் இடத்தையும், பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.