விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர், வளத்தி, செஞ்சி, மேல்சித்தாமூர், திண்டிவனம், முருக்கேரி, மரக்காணம், கிளியனூர், வானூர், குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, குடும்பம், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள், பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ’’சிறிய அளவில் தொடங்கப்பட்ட தடுப்பூசி போடும் பணி இன்றைக்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஒரு கோடியே 1 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதுவரை, ஒரு கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 30 தடுப்பூசிகள் வந்துள்ளன. செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் ஒரு கோடியே 1 லட்சத்து 30 ஆயிரத்து 594 ஆகும். மேலும், கையிருப்பில் ஐந்து லட்சத்து 39 ஆயிரத்து 780 தடுப்பூசி இன்றும், நாளையும் மக்களுக்கு செலுத்தப்பட்டு விடும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 37 மாவட்டங்களில் தொற்றின் அளவு பெரிய அளவில் சரிந்து 100க்கும் குறைவான தொற்று உள்ள மாவட்டங்களாக 2 மாவட்டங்களும், 500க்கும் குறைவான தொற்றுள்ள மாவட்டங்கள் 28,500க்கும் மேலான தொற்று உள்ள மாவட்டங்கள் 5, அதேபோல் 1000க்கும் மேலான தொற்று உள்ள மாவட்டங்கள் 2 என்கிற அளவில் இன்றைக்கு கரோனா தொற்றின் எண்ணிக்கை காணப்படுகிறது.
தேவையான தடுப்பூசிகளை பெறுவதற்கு, வருகின்ற 17ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான தடுப்பூசிகளை கேட்டுப் பெற்று அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்ட போது விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இந்த கோரிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் கொண்டு சென்று அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையை வேறிடத்திற்கு மாற்றி சிறந்த மருத்துவமனையாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பணி வேண்டி கோரிக்கை ஒருபுறம், கரோனாவுக்காக தங்க சங்கிலி மறுபுறம்?