விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்துத் துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக, விழுப்புரம் நகர பகுதியான பூந்தோட்டம், மருத்துவமனை வீதியில் உள்ள இரண்டு நகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சிற்றுண்டி திட்டம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் மற்றும் எம்.பி. கெளதம சிகாமணியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பள்ளி மாணவர்கள் உடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எந்த மாவட்டத்திற்கு சுற்றுப் பயணம் செய்தாலும், அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் காலை சிற்றுண்டி தரமாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வோம். அதன் அடிப்படையில், இன்று இங்கு ஆய்வு செய்ததில் தரமான உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காலை சிற்றுண்டி திட்டம் நகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படுவது போன்று, பேரூராட்சி பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்துள்ளார். விரைவில் அது விரிவுபடுத்தப்படும். விளையாட்டுத் துறையில் 31 அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை படிப்படியாக நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிதியமைச்சர் மாற்றமா? மே இரண்டாம் வாரத்தில் திமுக அமைச்சரவையில் மாற்றமா?