விழுப்புரம் : தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் பல கோடி மதிப்பில் மெரினா கடற்கரையில் அமைக்கபட உள்ளது. இதனையொட்டி மாதிரி நினைவு பேனா சின்னம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், கருணாநிதியின் மாதிரி பேனா நினைவுச் சின்னம் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்தது. விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்ட பேனா நினைவு சின்னத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி கெளதம் சிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி, மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர்.
முத்தமிழ் தேர் என பெயரிடப்பட்டுள்ள பேனா சின்னத்தை அமைச்சர் பொன்முடி, கெளதம் சிகாமணி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது பேனா நினைவுச் சின்னத்தின் முன் பொதுமக்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். தேரின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் அவருடைய தாயார் சிலைக்கு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அரசுப்பள்ளி மாணவிகள் நடிகர் பிரபுதேவா நடித்த காதலன் திரைப்பட பாடலான “முக்காலா முக்காபுலா” பாடலுக்கு நடனமாடினர். அந்த நடனத்தைக் கண்டு ரசித்த அமைச்சர் பொன்முடி, மாணவிகளின் நடனம் முடிந்த பிறகு, அவர்களுடன் மேடையிலையே உற்சாகமாக அந்த பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்.
பின்னர், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் பொன்முடி கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் வரவேற்பில் மாணவிகளுடன் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை அதிகாரி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு..!