விழுப்புரம்: தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான். அமைச்சரின் மகன் மொக்தியார் அலி செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
செஞ்சி மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும், அமைச்சரின் சகோதரர் காஜா நசீர் செஞ்சி நகர திமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்தனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்துக் கொண்டு கோஷ்டி பூசலை உருவாக்கி வருவதாக தொடர் குற்றச்சாட்டுளுடன், திமுக தலைமை கழகத்துக்கு 13 கவுன்சிலர்கள் தங்கள் கையொப்பமிட்ட ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்தனர்.
அதுமட்டுமின்றி, அரசு மற்றும் கட்சி பணிகளில் அமைச்சர் மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு டெண்டர் பணிகளை கட்சியினருக்கு பிரித்து கொடுக்காமல் அனைத்துப் பணிகளையும் செஞ்சி மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களே எடுத்து செய்து வருவது, கள்ளச்சாராய வியாபாரிகளோடு அமைச்சர் மஸ்தானுக்கு தொடர்பு போன்ற அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சை மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது.
அதன் அடிப்படையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செஞ்சி நகர திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் காஜா நசீரை அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன்பிறகும் அரசு மற்றும் கட்சி பணிகளில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் குறையாமல் இருந்து வந்தது. இதனால், திண்டிவனம் நகரமன்ற திமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
இதனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்த திமுக தலைமை, தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகியோர் வகித்து வந்த கட்சி பதவிகளையும் பறித்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பியின் பதவி பறிப்போன நிலையில் தற்போது மகன், மருமகனின் கட்சி பதவியும் பறிபோய் உள்ளதால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிகுந்த மன உளைச்சலில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இதன் பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம், கட்சி மற்றும் அரசு விழாக்களில் எடுபடாது என்கிற பேச்சும் எழுந்துள்ளது. மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டு நாசருக்கு வழங்கப்படும் என தகவல் பரவிய நிலையில், மஸ்தானின் மகன் மற்றும் மருமகன் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதால் அவர் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்ற மனநிலையில் இருப்பார் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.