விழுப்புரம் மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல், வருவாய் ஈட்டும் தாய்/தந்தையர், விபத்தில் இறந்த/நிரந்தர முடக்கம் அடைந்தவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், மாற்றுத்திறனாளிக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கூடைப்பந்து ஆடுகளம், உயரிய தொழில்நுட்ப ஆய்வகம் திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கில் மத்திய அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும்வரை தமிழ்நாடு அரசின் கடிதம் பூஜ்ஜியம் எனத் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், "ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் வரம்பு மீறி பேசியுள்ளார். அவர் பேசிய வார்த்தை அவருடைய தகுதிக்கு குறைவானது. இது வரம்பு மீறிய செயல். அவர் தெரிந்தே சொன்னாரா என்றும் தெரியவில்லை.
ஏனென்றால் மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்கில் உள்ள குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றால் இந்திய அரசு அனுமதி பெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கருணை மனு ஆளுநரிடம் இருக்கும்போது அதுதொடர்பாக ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்நாடு அரசு அமைச்சரவையைக் கூட்டி தமிழ்நாட்டின முடிவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். இதில், மத்திய அரசை கேட்க வேண்டும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க முழு உரிமை ஆளுநருக்கு உண்டு. இதில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும்.
மத்திய அரசின் வழக்குரைஞர் தேவையற்ற, தகுதிக்கு குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இது கண்டனத்துக்குரியது. மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது? வழக்குரைஞரின் செயல் தவறானது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோரை நியமித்ததில் தவறில்லை: கி. வீரமணி