விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் தமிழ்ச்செல்வன்(30). லாரி ஓட்டுநரான இவர், நேற்று (ஜூன் 6) அதிகாலை விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் மேல்பாதி பகுதி சமத்துவபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடந்த 5ஆம் தேதி இரவு கோலியனூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு சாப்பிடும்போது ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த கனகசபாபதி, மூர்த்தி, செந்தில், ராஜேஷ், செல்வி மற்றும் சிறுவள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.