விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் பயணியர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் செயல்வீரர் கூட்டத்தில் அன்று (செப். 29) தான் கலந்துகொள்ளப் போவதாகத் தெரிவித்தார். அதேபோல் நாங்குநேரி செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்துகொள்ளப் போவதாகவும் கூறினார். மேலும் இரு இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றிபெறுவார்கள் என்றார்.
குரூப் 2, டிஎன்பிசி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுகளில் மொழிப்பாடம் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் மேலும் தமிழ்நாடு அரசுப் பொதுத்தேர்தலுக்கு முன் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல் நடைபெறுமென அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுவதால் மக்களுக்கான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கி அம்மாநில மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததற்கு அம்பேத்கரை சுட்டிக்காட்டி பேசுவது மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் மேலும் இது வெட்கக்கேடான செயல் என்றும் பாஜகவை கடுமையாகச் சாடினார்.
மேலும் படிக்க : ஒரே அடி வளர்ந்த வாழை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்!